நளினி விடுதலை -‍ என்ன செய்ய வேண்டும் நாம்?

ஏப்ரல் 22, 2010

04.04.2010 அன்று சென்னையில் கீற்று.காம் ஏற்பாடு செய்திருந்த ‘நளினி விடுதலை சட்ட சிக்கலும் அரசியல் சிக்கலும்’ என்னும் கூட்டத்தில் தோழர் தியாகு ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

தோழர் தியாகு

தோழர் தியாகு

தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். நளினி விடுதலை அல்லது விடுதலை மறுப்பில் அடங்கியிருக்கிற சட்டச்சிக்கலும் அரசியல் சிக்கலும் என்பது பற்றி கீற்று இணைய தளம் ஒழுங்கு செய்திருக்கிற கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்ட வாய்ப்பிற்காக‌‌ நன்றி!

சட்டச்சிக்கல் பற்றி முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏனென்றால் வாழ்நாள் சிறைத்தண்டனை வழக்குகளில் விடுதலை என்பது பற்றி எத்தனையோ விவாதங்கள் நடைபெற்றும் ஒரு குழப்பம் நீடித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நளினியை விடுதலை செய்ய மறுக்கத் தமிழக அரசு குறிப்பிட்ட அந்த காரணங்கள், அப்போது அறிவுரைக்கழகம் காட்டிய காரணங்கள் இவற்றில் எதையுமே உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் இந்திய அரசின் அரசமைப்புச்சட்டத்தின் 161ஆவது உறுப்பின்படியோ குற்ற நடைமுறைச்சட்டத்தின் 433ஆவது பிரிவின்படியோ மீண்டும் இவ்வழக்கைப் பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. பலருக்கும் ஓர் ஐயப்பாடு எழலாம். விடுதலையை மறுப்பதற்கு அரசு கூறிய காரணங்கள் எவற்றையுமே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை; அறிவுரைக் கழகம் கூறிய காரணங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியானால் நளினியை விடுதலை செய்ய வேண்டியது தானே! அப்படி விடுதலை செய்யாமல் மீண்டும் ஒரு முறை நீங்கள் இந்தச் சட்டப்பிரிவின்படி விடுதலை செய்யலாம் என்னும் கருத்தை நீதிமன்றம் ஏன் முன்வைக்கிறது?

அந்நேரத்தில் நான் ஓர் இதழுக்கு அளித்த நேர்காணலில், ‘குற்ற நடைமுறைச்சட்டத்தின் 433ஆவது பிரிவின்படியோ 432 முதல் 435 வரை உள்ள பிரிவுகளின் படியோ முன்விடுதலை பரிசீலனை என்றால் தான் அறிவுரைக் கழகம் அமைக்க வேண்டும். அறிவுரைக்கழகம் அமைப்பது, பிறகு அறிவுரைக்கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் நாள், நேரம் கிடைத்து ஒன்றுகூடுவது, அவற்றுக்கான ஆவணங்களைச் சுற்றுக்கு விடுவது எல்லாம் நீண்ட காலத்தை இழுத்து அடிக்கக்கூடிய வேலை. இது உயர்நீதிமன்றத்திற்கே நன்கு தெரிந்ததால்தான் அரசமைப்புச்சட்டத்தின் 161ஆவது உறுப்பைப் பயன்படுத்தியோ குற்ற நடைமுறைச்சட்டத்தின்படியோ என்று இரண்டு வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார்கள். எனவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாரத்தை இவ்வரசு ஏற்றுக்கொள்வதாக இருந்தால் 161ஆவது உறுப்பின்படி உடனடியாக விடுதலை செய்யலாம். அதற்கு எந்த நடைமுறை சம்பிரதாயங்களும் தேவையில்லை; இதைத்தான் அரசு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டேன்.

ஆனால் வாழ்நாள்(ஆயுள்) கைதிகள் தொடர்பாக இந்த ஒரு வழக்கில் மட்டுமில்லை. இதற்கு முன் வந்திருக்கின்ற எத்தனையோ வழக்குகளில் எந்த வழக்கிலும் நேரடியாக உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ ஒரு வாழ்நாள் கைதிக்கு நேரடியாக விடுதலை வழங்கியதில்லை.

தமிழ்நாட்டில் இருந்து போன சில வழக்குகளைக் குறிப்பிடுவதாக இருந்தால் புலவர் கலியபெருமாள், அனந்தநாயகி, வள்ளுவன், நம்பியார் ஆகியோரை விடுதலை செய்யக் கோரித் தில்லியைச் சேர்ந்த‌ கன்சியாம் பிரதேசி என்னும் (‘Statesman’ இதழின்) இதழாளர் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அப்போது உச்ச நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்வது நியாயம் எனக் கருதியது. நீதிபதி கிருஷ்னய்யர் அந்நீதிபதிகளுள் ஒருவராக இருந்தார். ஆனால் அப்போதும் அவர்கள் அரசிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்; ‘ஒரு முடிவு எடுங்கள்! முடிவு எடுங்கள்; இவர்களிடம் ஏதாவது ஓர் உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டாவது விடுதலை செய்யுங்கள்’ என்று வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

அனந்தநாயகி உயிருக்கு ஆபத்தான் நிலையில் இருந்ததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என அரசிடம் வலியுறுத்தினார்கள். அவரை அரசுதான் பிறகு விடுதலை செய்தது. மற்றவர்களைப் பொறுத்தவரை ‘கருதிப் பார்த்து, பரிசீலித்து’ என்று பலவிதமாகச் சொல்லிப்பார்த்தார்கள். அரசு ஏதும் நகர்ந்து கொடுப்பதாக இல்லை. பிறகு அவர்களைக் காலவரம்பற்ற காப்பு விடுப்பில்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்றைக்கும் அவ்வழக்கின் நிலை அதேதான்! இன்னும் அவர்களுக்கு முழுமையான விடுதலை வழங்கப்படவில்லை; உச்ச நீதிமன்றம் கொடுத்த காலவரம்பற்ற காப்பு விடுப்பில்தான் அவர்கள் வெளியே இருக்கிறார்கள். புலவர் கலியபெருமாள் இறந்தே போய்விட்டார்.

1980 ஆம் ஆண்டு வந்த மாதுராம் வழக்கு, வாழ்நாள்(ஆயுள்) தண்டனை கைதிகள் தொடர்பான வழக்குகளுள் முதன்மையானது ஆகும். குற்ற நடைமுறைச்சட்டத்தின் 433 ‘A’ பிரிவு செல்லுமா செல்லாதா என்பது பற்றி நடைபெற்ற வழக்கு அது! நான் அப்போது சென்னை மத்திய சிறையில் இருந்தேன். தில்லியில் இருந்து ஒரு வழக்கறிஞர் வந்திருந்தார். அவர் வாழ்நாள் கைதிகளை எல்லாம் அழைத்து ‘உங்கள் எல்லோருக்கும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் விடுதலை வாங்கிக் கொடுக்கிறோம். அதற்குத் தேவையானதெல்லாம் நீங்கள் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்திருக்க வேண்டும்; நாங்கள் நீட்டுகிற இவ்விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும்; இதைத் தவிர ஐந்நூறு உரூபாப் பணம் கொடுத்தால் போதும்; உங்களுக்கு விடுதலை வந்துவிடும்’ என்று அவர்கள் கூறினார்கள். அதை நம்புவதற்கே கடினமாக இருந்தது. ஆனால் அப்படி ஒரு சிலர் கொடுத்தார்கள்; ஆனால் இந்த வழக்கு அரங்கிற்குப் போவதற்கு முன்பே வட நாட்டில் 500, 600 வாழ்நாள் கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அதைப் பிணை விடுதலை என உச்சநீதிமன்றம் வழங்கியது. அதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணம் என்னவென்றால், 433 ‘A’ என்கிற இந்தப் புதிய சட்டப்பிரிவு 1978ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டப்பிரிவின்படி ஒரு வாழ்நாள் கைதி மரணத் தண்டனை விதிக்கப்பட வேண்டிய வழக்கில் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டிருக்குமானால் அவர் குறைந்தது பதினான்கு ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டும். 1978க்குப் பின் தண்டிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும். அதற்கு முன் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது என்று நீதிமன்றம் ஒரு முடிவெடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்த எல்லோருக்கும் பிணை விடுதலை வழங்கியது. வழக்கு இறுதியில் தீர்ப்பாகிற போது நீதிபதி கிருஷ்ணய்யர் ‘பிணையில் விடுவிக்கப்பட்டவர்களைத் திரும்ப அழைக்கத் தேவையில்லை; அவர்களைத் திரும்பச் சிறைக்கு அழைப்பதாக இருந்தால் அரசு அதற்கான காரணங்களை இந்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று ஓர் உத்தரவு போட்டார்.

இப்படி நடைமுறை வழிமுறைகளைக் கொண்டு சாமர்த்தியமாக நீதிமன்றம் சிலரை விடுவித்திருக்கிறதே தவிர நேரடியாக வாழ்நாள் கைதி எவரையும் நீதிமன்றம் விடுவித்ததில்லை. என் வழக்கில் இல்லை என்றாலும் வேறு சில வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன்; சில வழக்குகளை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இராமசாமி முன்னிலையில் இதே போன்ற ஒரு வழக்கை நடத்தினோம்; ‘அரசு சொன்ன காரணங்கள் ஏற்புடையனவாக இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று நாங்கள் கேட்டோம். நீதிபதி ‘நான் அவரைக் காலவரம்பற்ற பிணையில் விடுவிக்கிறேன். அரசு பிறகு பரிசீலித்து முடிவெடுக்கட்டும்; அறிவுரைக் கழகம் எப்போது வேண்டுமானாலும் கூடட்டும்; எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கட்டும்; அதற்காக அவரைச் சிறையில் வைத்திருக்கத் தேவையில்லை’ என்று விடுதலை செய்தார். இப்படித்தான் வழக்குகள் எல்லாம் நடக்கின்றன. ஏன் இதற்கான காரணங்கள் என்ன?

மாருராம் வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர், ‘பதினான்கு ஆண்டுகள் எவரையும் சிறையில் வைத்திருக்கத் தேவையில்லை. எங்களுடைய பார்வையில் சீர்திருத்துவதற்கு எட்டாண்டுக் கருவாசம் போதும். (‘ Eight years of Gestation for reformation is enough’) கருவறையில் ஒரு குழந்தை பத்து மாதத்திற்கு மேல் இருப்பது அக்குழந்தைக்கும் ஆபத்து; தாய்க்கும் ஆபத்து. ஒரு மனிதனை எட்டாண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து வைப்பது அவனுக்கும் நல்லதன்று; அவனை அடைத்து வைத்திருக்கிற சமூகத்திற்கும் நல்லதன்று என்பதால் தான் கருவறை வாசத்தைச் சிறையறை வாசத்துடன் ஒப்பிட்டு எட்டாண்டுதான் அதிக அளவு; அதற்கு மேல் தேவையில்லை. ஆனால் நாங்கள் கருத்துச் சொல்லமுடியுமே தவிர, புதிதாகச் சட்டத்தை உருவாக்க முடியாது (‘We can only construe and not construct’). சட்டத்திற்கு விளக்கம் அளிக்க உரிமை உண்டே தவிர புதிய சட்டம் இயற்ற எங்களுக்கு உரிமை இல்லை (‘We can only decode and not make a code’). எனவே எட்டாண்டுகள் போதும் என்றாலும் குறைந்தது பதினான்கு ஆண்டுகள் வைக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் இயற்றியிருக்கிற இச்சட்டம் அரசமைப்புச்சட்டத்தை மீறுவதன்று; அரசமைப்புச்சட்டத்தின் எழுபத்து இரண்டாவது உறுப்பின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இருக்கிற அதிகாரத்தையும் 161ஆவது உறுப்பின்படி மாநில ஆளுநருக்கு இருக்கிற அதிகாரத்தையும் இது பறிப்பதன்று’ என்று தீர்ப்பு எழுதி அவ்வழக்கை முடித்தார்.

வாழ்நாள் கைதியை விடுதலை செய்ய முடியாது என்னும் கருத்திற்கு அடிப்படையான வழக்கு கோபால் கோட்சே தொடர்ந்த வழக்கு ஆகும். அவர் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர். அண்மையில் கூடச் சுப்பிரமணியசாமி ‘டைம்ஸ்நவ்’ விவாதத்தில் சொல்லும்போது ‘காந்தி கொலையாளி கோட்சேவை மன்னிக்கவில்லை; இராசீவ் கொலையாளி நளினியை ஏன் மன்னிக்க வேண்டும்?’ என்று கேட்டார். அவருக்கு ஒரு விவரம் தெரியாது. என்ன விவரம் என்றால், நளினிக்கு விதிக்கப்பட்டிருப்பது இப்போதைய நிலையில் வாழ்நாள் தண்டனை. இதே வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டது காந்தி கொலை வழக்கில் கோபால் கோட்சேவிற்கு. கோபால் கோட்சே தன்னுடைய தண்டனைக்காலம் பதினான்கு ஆண்டுகளை நெருங்குகிறபோது நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார். அவ்வழக்கில் அவர் ‘ பதினான்கு ஆண்டுகள் கழிந்ததும் விடுதலை செய்துவிட வேண்டும். நான் சிறைக்குள் வேலை செய்திருக்கிறேன்; நல்லொழுக்கம் காட்டியிருக்கிறேன். எனவே தண்டனைக்கழிவு(‘Remission’) கொடுத்திருக்கிறார்கள். எனவே என்னுடைய தண்டனைக்கழிவுகளை எல்லாம் சேர்த்துக் கணக்கிட்டால் நான் பதினான்கு ஆண்டுகள் முடித்துவிட்டேன். என்னை விடுதலை செய்யாமல் இருப்பது தவறு. எனக்கு விடுதலை பெறுகிற உரிமை உண்டு’ என்று கூறி ஒரு வழக்கு போட்டார்.

அப்போது நீதிமன்றம் ‘ஒரு வாழ்நாள் கைதிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை’ என்றால் ‘உயிரோடு இருக்கிற வரை சிறை’ என்று தான் பொருள். ‘Life means life’, ‘Life sentence’ என்றாலோ ‘Imprisonment for life’ என்றாலோ ‘Imprisonment unto death’ என்றுதான் பொருள். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துக் கூட ஒருவர் உயிரோடு வெளியில் வந்தால் அது தண்டனை கழித்து வருகிற விடுதலை இல்லை; முன்விடுதலைதான்!(‘Mature Release’ இல்லை; ‘Premature Release’) இது கோபால் கோட்சே வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

ஆனால் அதற்குப் பிறகு, பதினான்கு ஆண்டுகள் கழித்து முடித்த பிறகு உண்மையிலேயே மகாராட்டிர காங்கிரசு அரசு கோபால் கோட்சேவை விடுதலை செய்தது. இப்போது குற்றத்திற்கு வருத்தப்படுவது (‘Repentance’) பற்றிப் பேசுகிறார்கள். வெளியில் வந்து ஓராண்டு கழித்து அமெரிக்க டைம்ஸ் இதழுக்கு கோபால் கோட்சே நேர்காணல் அளித்தார். ‘மகாத்மா காந்தியைக் கொன்றது பற்றி நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஏன் வருத்தப்பட வேண்டும்? அது மக்களுக்கு எல்லாம் வருத்தமளித்தது என்பது உண்மை. ஆனால் எனக்கு வருத்தமளிக்கவில்லை. அவரைக் கொலை செய்ததற்காக நான் வருந்தவில்லை; யாரிடமும் மன்னிப்புக் கோரவும் இல்லை’ என்று சொன்னார். இது கோபால் கோட்சேவின் வாக்குமூலம்.

மகாத்மா காந்தி வழக்கில் கோபால் கோட்சேவிற்குப் பதினான்கு ஆண்டுகள் கழித்து விடுதலை! ‘எனக்கு வருத்தமில்லை’ எனப் பிறகு அவர் நேர்காணல் அளிக்கிறார். ஆனால் இராசீவ் காந்தி கொலை வழக்கில் நேரடியான கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர், சதிக்குற்றத்தில் ஈடுபட்டவர் என்றெல்லாம் ஒன்றுமில்லை; இதைச் செய்தவர்களுக்குத் துணை செய்தவர், இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு ஒரு மறைதிரையாகப் பயன்படுத்தப்பட்டவர் என்பது தான் வழக்கின்படியே குற்றச்சாட்டு! அவர் வருத்தப்படவில்லை என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். பதினான்கு ஆண்டுகள் கழித்ததற்குப் பிறகும் முன்விடுதலை இல்லை! ஏன்?

சட்டத்தின் அடிப்படையில் இந்த வாழ்நாள் (ஆயுள்) சிறைத்தண்டனை என்பது பிரித்தானிய ஆட்சிக்காலத்துத் தீவாந்திர சிட்சையின் தொடர்ச்சி! மரண தண்டனைக்கு மாற்றாக இன்னொரு தண்டனை என அவர்கள் கருதியபோது தொலைவில் ஒரு தீவில் கொண்டு போய் அவர் சாகும் வரை அடைத்து வைப்பது என்ற தண்டனை முறையை உருவாக்கினார்கள். அந்தமான் தீவுச்சிறை இதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ‘பட்டாம்பூச்சி’ படித்தவர்களுக்குத் தெரியும். இவ்வளவு வளர்ச்சி அடைந்த ஐரோப்பாவில், நாகரிகம் அடைந்த பிரெஞ்சு நாட்டில் தென் அமெரிக்கத் தீவுகளில் கொண்டுபோய் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விட்டுவிடுவது, சிறைப்படுத்துவது, சாகும்வரை அவர்கள் அங்கேயே கிடந்து சாக வேண்டும்; செத்தபிறகு அவர்களைக் கடலில் சுறாமீன்களுக்குத் தீனியாக்கி விடுவது என்ற நடைமுறை இருப்பதைப் ‘பட்டாம்பூச்சி’யிலேயே நாம் படித்தோம். இது வாழ்நாள் தண்டனையின் வரலாறு. வாழ்நாள் தண்டனை என்பது இந்த வகையில் விடுதலைக்கான உரிமையைக் (‘No right to release’) கைதிக்கு வழங்கவில்லை.

நான் 1983 அல்லது 1984ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாருராம் வழக்குத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறி ஒரு வழக்கைத் தொடர்ந்து நானே அந்த அவ்வழக்கில் வாதிடுகிறபோது ‘சட்டப்படி விடுதலை பெறும் உரிமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் ஒருவரை விடுதலை செய்வது, இன்னொருவரை விடுதலை செய்யாமல் இருப்பது என்றால் அது அரசமைப்புச்சட்டத்தின் சமத்துவம் பற்றிய உறுப்பை மீறுகிறது. விடுதலை செய்வதற்கும் விடுதலை செய்ய மறுப்பதற்கும் அரசு நியாயமான காரணங்களைக் காட்டாதபோது அது ‘Right to life and liberty’ என்பதை மீறுகிறது. எனவே அரசமைப்புச் சட்ட உறுப்புகளின்படி விடுதலை செய்வதைப் பரிசீலிக்கிற போது சமத்துவம் வேண்டும்; தற்போக்கான தன்மை இருக்கக்கூடாது; காரண நியாயங்கள் இருக்க வேண்டும்’ என்ற வாதத்தை முன் வைத்தேன். ‘It should not be orbitrary, unreasonable’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இதே வாதத்தை இப்போது நளினி வழக்கில் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அறிவுரைக் கழகம் பரிசீலித்த முறையும் அரசு முடிவெடுத்த முறையும் நியாயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களைச் சொல்வதாக இல்லை; அறிவுக்கு ஒத்த நடைமுறையாக இல்லை. இது தற்போக்கான முடிவாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்ததால் தான் மீண்டும் ஒருமுறை அறிவுரைக்கழகத்தை முறையாக வைத்து முறையாகப் பரிசீலித்து முடிவு தாருங்கள் என்று அது கேட்டது.

இப்படி ஒரு தீர்ப்பைப் பெற்றதற்கு வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் அரசு செயல்பட்டிருக்கிறது. என்ன பெரிய அறிவுரைக் கழகம்? நாங்கள் பார்த்து வைத்த ஆள்தானே என்று அவர்கள் வழியாக இந்த வஞ்சம் தீர்க்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள்; வேக வேகமாகச் செய்கிறபோது அதை முறையாக செய்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கிற அடிப்படை, வாழ்நாள் தண்டனை என்பதிலே இருக்கிறது. நாம் மரணதண்டனையை எதிர்க்கிறோம். தூக்குத்தண்டனையை எதிர்க்கிறோம். ‘எல்லா இடங்களிலும் எல்லாச் சூழலிலும் எல்லாக் குற்றங்களிலும் எதிர்க்கிறீர்களா’ என்று நண்பர்கள் கேட்கிறார்கள். ஆம்! எல்லாச் சூழல்களிலும் எல்லா இடங்களிலும் எதிர்க்கிறோம்.

தூக்குத் தண்டனை கூடாது! கூடவே கூடாது! தண்டனையே கூடாது என்பதன்று! தூக்குத் தண்டனை கூடாது. இதில் வேடிக்கை என்னவென்றால் தூக்குத் தண்டனையை எதிர்ப்பதற்கான ஒரு காரணியை ஆந்திரத்தைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி K.G.கண்ணபிரான் சுட்டிக்காட்டுகிறார். மரண தண்டனை கொடுக்கப்படுகிற வழக்குகளில் சாட்சியத்தை நம்ப முடியுமா? முடியாதா? அது எந்த அளவுக்கு அடிப்படைகள் கொண்டது? அது திரும்புகிறதற்கு வாய்ப்பளிக்கிறதா இல்லையா? இவை எல்லாவற்றிற்கும் மேலான காரணத்தை அவர் சொல்கிறார்.

‘ஒரு சனநாயக சமூகம், குடியரசுக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிற ஒரு சமூகம், சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு சமூகம் ஒரு மனிதனின் உயிர் நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை ஒரு தனிமனிதனின் விருப்புவெறுப்புகளுக்குத் தரக்கூடாது’ என்பதை ஒரு காரணமாக அவர் குறிப்பிடுகிறார்.

பசல் சிங் வழக்கில் நீதிபதி எடுத்துக்காட்டிய காரணம், ‘பெரும்பான்மையான நீதிபதிகள் அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை என்று கூறியபொழுது அரிதிலும் அரிதானது எது? என்பதை யார் சொல்வது’ என்று பகவதி கேட்டார். எது அரிதினும் அரிதானது? இராசிவ் கொலை அரிதினும் அரிதானது என்று என்ன அளவுகோலின்படி முடிவு செய்தீர்கள்?

சுவீடன் பிரதமர் உலோப் பானி கொல்லப்பட்டார். அவர் இராசீவ் காந்தியின் நண்பர். போபர்சுத் தொடர்புடைய ஓர் அரசியல் தலைவர். அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை நீதிமன்றம் விடுதலை செய்தது. உலோப் பானியின் மனைவியிடம் போய் ‘ உங்கள் கணவனைக் கொன்றவனை நீதிமன்றம் விடுவித்தது. இது பற்றி நீங்கள் வருந்துகிறீர்களா? உங்கள் மன உணர்வு என்ன?’ என்று கேட்டார்கள். அந்த அம்மையார் ‘அவர் குற்றம் செய்யவில்லை என நீதிமன்றம் சொல்லி விடுவித்திருக்கிறது. பிறகு நீங்கள் ஏன் அவரை என் கணவரைக் கொன்றவர் எனச் சொல்கிறீர்கள்?’ என்று திருப்பிக் கேட்டார். உலோப் பானியின் கொலையில், சுவீடனில் அவர்கள் சொல்லி விட்டார்கள்; அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. ஒருவர் அவ்வழக்கில் பொய்க்குற்றச்சாட்டு என்று விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் இந்தத் தண்டனை கொடுக்கலாம்? கொடுக்க வேண்டாம் என்று யார் முடிவு செய்வது? கோவிந்தசாமி வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுவிக்கிறது. மேல் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்கிறது. நான் கடந்த காலங்களில் இவ்வழக்குகளைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். எதைச் சான்றாக வைத்து முடிவு செய்வது? இதுதான் முதன்மையான செய்தி, அப்படியானால் ஒரு வாழ்நாள் கைதியின் விடுதலை என்பதற்கு உரிமை இல்லை! அதற்கொரு காலவரையறை கிடையாது. கால வரையறை வேண்டும் என்கிற இக்கருத்து சிறையில் இருந்து இத்தண்டனையை அனுபவித்து தண்டனைப்பட்டவர்களின் துன்பங்களை, துயரங்களை நன்கு அறிந்திருக்கிற என்னைப் போன்ற ஒருவர் கூறுவது மட்டுமன்று; கிருஷ்ணய்யர், தேசாய் போன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுடைய ஆழ்ந்த கருத்தும் கூட.

சனதா கட்சி அரசு நடத்திய காலத்தில் நீதிபதி முல்லா என்பவருடைய தலைமையில் ஓர் ஆணையத்தை நிறுவிச் சிறைச் சட்டங்களிலும் சிறைகளிலும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய அறிக்கையை அரசு கேட்டது. முல்லா அவ்வறிக்கையில் ‘குற்ற நடைமுறைச் சட்டத்தின் 433 ‘ஆ’ பிரிவின் படி ஒரு வாழ்நாள் கைதியைக் குறைந்த அளவு பதினான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்றிருக்கிறது; இது தேவையற்றது. 433 ‘ஆ’ பிரிவு தேவையற்றது. எட்டாண்டுகளுக்கு மேல் எவரையும் சிறையில் வைக்கத் தேவையில்லை என்பது தான் ஆணையத்தின் கருத்து’ என்று எழுதினார். அவர் இவ்வறிக்கையை எழுதிய ஆண்டு 1980ஆம் ஆண்டு, மொரார்ஜி பிரதமராக இருந்த காலத்தில்! புதிய நடைமுறைச்சட்டம் 1978ஆம் ஆண்டு வந்தது. அவர் ‘இந்தக் குற்ற நடைமுறைச் சட்டம் செயலுக்கு வந்து எட்டாண்டு, பத்தாண்டு கழித்து விடுதலையாக வேண்டியவர்கள் விடுதலை செய்யப்படாமல் இந்தச் சட்டத்தினால் தடுக்கப்படுகிற பொழுது சிறைக்கூடங்கள் புரட்சிக்கூடங்களாக மாறும்’ என்று எச்சரிக்கிறார். இது நீதிபதி சொன்ன வாசகம்!

இத்தனை ஆண்டு கழித்து எங்களை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறாய் என்றால் அது அவனை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, பக்குவப்படுத்துவதற்கு, அவனுடைய சினங்களைக் குறைப்பதற்குப் பயன்படுத்துவதற்கு மாற்றாகச் சிறைகளைக் கலகக்கூடங்களாக மாற்றிவிடும் என்று அவர் எச்சரித்தார். ‘பதினான்கு ஆண்டு தேவையில்லை! எட்டாண்டு போதும்’ இது முல்லா குழுவின் அறிக்கை! இப்படி நிறைய சான்றுகளை நாம் காட்ட முடியும். எனவே நண்பர்களே! மரண தண்டனை மட்டுமன்று! காலவரம்பற்ற தண்டனையைக் குறிக்கிற வாழ்நாள் தண்டனையும் கூடாது என்பது அடிப்படை மனித உரிமை முழக்கமாக எழுப்பப்பட வேண்டும். நளினி விடுதலை மறுப்பில் இருந்து நாம் கற்கிற ஒரு பாடமாக இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இருபது ஆண்டா? முப்பது ஆண்டா? நாற்பது ஆண்டா? அந்த நாற்பது ஆண்டில் எவ்வளவு தண்டனைக் கழிவு பெற முடியும்? உழைப்பதன் மூலம் எப்படிப் பெற முடியும்? நன்னடத்தை மூலம் எப்படிப் பெற முடியும்? படிப்பதன் மூலம் எப்படிப் பெற முடியும்? எல்லாவகையிலும் பெறலாம்.

நளினியை வெளியே விட்டால் இராயப்பேட்டையே கலகக்கூடமாக மாறிவிடும் என்று ஒரு ‘Clothes in a little authority’ என்று சேக்சுபியர் சொல்வாரே அப்படி ஒரு காக்கிச்சட்டை போட்டதாலேயே அதிகாரம் வந்துவிட்ட கேவலமான ஓர் அலுவலர் மேலிடத்தில் இருந்து கேட்டுக் கேட்டு எழுதிச் சொல்கிறாரே. இதே இராசீவ் கொலை வழக்கில் இருபத்தாறு பேருக்கும் ஒட்டுமொத்த மரண தண்டனை விதித்தீர்களே! நீதிபதி கிருஷ்ணய்யர் ‘இது ஒட்டுமொத்த மரண தண்டனை! எல்லோருக்குமாக ‘Wholesale Death sentence’ கொடுத்திருக்கிறீர்கள்’ என்றாரே! இது ‘Judicial Terrorism’ என்றாரே!

இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் பயங்கரவாதம் என்று அவர் சொன்னார். அப்படிக் கொடுத்தீர்களே! அந்த இருபத்தாறு பேரில் பத்தொன்பது பேர் விடுதலையாகிப் போனார்களே! அவர்கள் போன பக்கமெல்லாம் புல் எரிந்ததா? நெருப்புப் பற்றியதா? கலகம் நடந்ததா? அவர்கள் யார்? எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்? பத்மாவும் பாக்கியநாதனும் வாழ்வதால் இராயப்பேட்டையில் கலகம் வரவில்லை. நளினி வந்து சேர்ந்தால் வந்துவிடுமா? என்ன அபத்தம் இது? சிறை அமைப்பின் நோக்கம் பழிக்குப் பழி வாங்குவது, வஞ்சம் தீர்ப்பது என்றிருந்த காலம் வேறு! ஒரு நீதிபதி உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே, ‘இராசீவ் காந்தி மட்டும் கொல்லப்படவில்லை! இன்னும் பதினைந்துப் பேர் கொல்லப்பட்டார்கள். அந்தப் பதினைந்து பேரில் பெரும்பாலானோர் காவல்துறையினர்’. என்று எழுதுகிறார்.

சாதாரண குடிமக்கள் செத்தால்கூட அவர் மனம் வருந்தாது. பதினைந்து பேரில் பலரும் காவல் அலுவலர்கள். சரி! அவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்றா தனுவின் குண்டு வெடித்தது. இந்தப் பதினைந்து பேர் சரி! அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். ‘நளினியின் குழந்தை பற்றி வருத்தப்படுகிறார்களே! இராசீவ் அருகிலே இருந்து கவிதை படித்துக் கொடுத்தாளே இலதாவின் மகள்! அந்தக் குழந்தை பற்றிக் கவலைப்படவில்லையா?’ என்று நீதிபதி கேட்கிறார். சரி! அப்படியானால் வாதத்தைப் பின்னால் இழுத்துக் கொண்டு போவோம். இராசீவ் காந்திக்கும் அவர்களுக்கும் என்ன சிக்கல்? நீங்களே சொல்கிறீர்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கொடுமைகள் செய்தது. (‘The IPKF committed atrocities against Tamils’)’ – இது நீதிபதிகளின் வார்த்தை.

அதற்காகப் பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்தக் கொலையை இவர்கள் செய்தார்கள்? அப்படியானால் அந்தக் குழந்தையுடைய உயிரைவிட இவருடைய உயிர் பெரிதா? இதற்கு என்ன முடிவு? காந்தி ‘கண்ணுக்குக் கண் என்பது விதியானால் இந்த உலகம் குருடர்கள் நிறைந்ததாகி விடும்'(‘An eye for an eye makes the whole world blind’). என்றார். எல்லோரையும் குருடர்களாக்கி விடலாம். கண்ணுக்குக் கண் என்பதை விதியாக்கிக் கொண்டு! இது தான் உங்கள் தண்டனைக் கொள்கையா? இதுதான் சனநாயகமா? சீர்திருத்தம் செய்வதும் மறுவாழ்வு அளிப்பதும், ஏன் நளினி படித்தார் என்பதைச் சொல்ல வேண்டும். இது பொருத்தமான காரணம் இல்லையா? நளினிக்கு ஒரு குழந்தை இருப்பதை ஏன் சொல்ல வேண்டும்? நளினியின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதை ஏன் சொல்ல வேண்டும்? இன்றைய புதிய (நவீன) காலத்தில் ஒறுத்தலியலில் அடிப்படைக் கொள்கை என்ன என்பது இந்த அறிவுரைக்கழக அறிவிலிகளுக்குத் தெரியுமா?

மறுவாழ்வு (‘Rehabilitation’) என்பது ஓர் அளவுகோல் என்றால் அந்த மறுவாழ்வுக்குப் படிப்பு தேவைப்படுகிறது; குடும்பம் தேவைப்படுகிறது; தாய் தேவைப்படுகிறாள். இதுதானே அதைச் சொல்வதற்குக் காரணம். இது ஒரு காரணம் இல்லை என்றால் வேறு என்ன காரணத்தைச் சொல்வீர்கள்? இந்தக் காரணங்களை நீதிபதிகள் சொல்கிறார்கள். குழந்தை இருக்கிறது; படித்த பெண். இதே வழக்கில் இன்னும் அவருடைய கணவர் வேறு இருக்கிறார். சோனியா காந்தியே இதே வழக்கில் சொன்னார். நளினிக்குத் தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்த போது அவரே ‘என்னுடைய குழந்தையின் கதி அக்குழந்தைக்கு ஏற்படக்கூடாது என்று சொன்னார். இதை அறிவுரைக்கழகம் சொல்கிறதாம்! அதை அப்படியே அரசு ஏற்றுக்கொள்கிறதாம்!! அறிவுரைக் கழகம் சொல்வதை எல்லாம் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் எதுவும் இல்லை.

எங்களுடைய வழக்கில் நாங்கள் நான்குப் பேர் இருந்தோம். எனக்கும் இன்னொரு தோழருக்கும் அறிவுரைக் கழகம் பரிந்துரைத்தது. காரணம் நிகழ்ச்சி நடைபெற்ற ஊருக்குத் தொலைவான ஊர் எங்கள் ஊர். ஆனால் சில தோழர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களை விடக் கூடாது என அறிவுரைக் கழகம் பரிந்துரைத்தது. அறிவுரைக் கழகப் பரிந்துரையைப் புறந்தள்ளி விட்டுத்தான் அன்றைக்கு அரசு எங்கள் நால்வரையும் ஒரே நேரத்தில் ஒருங்கே விடுவித்தது. ஒரு மாவட்ட ஆட்சியர் என்னுடைய விடுதலைக்குப் பரிந்துரைத்து எழுதினார். இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். இவருடைய விடுதலையை நாங்கள் அழுத்தமாகப் பரிந்துரைக்கிறோம். ஏதோ நளினி உண்ணாநிலையில் இருந்தார் என்று சொல்கிறார்களே, நாங்கள் உண்ணாநிலையைத் தவிர வேறு என்ன இருந்தோம்! ஆண்டுக்கு ஆண்டு அதனால் தான் நலமாக வெளியே வந்தோம்! அட்டை எல்லாம் சிவப்பாக இருக்கும்; வரலாற்று அட்டை! ‘Most dangerous criminals’ என்று எழுதி வைத்திருந்தார்கள்.!

விடுதலை செய்யலாம் என்று எப்படிப் பரிந்துரைக்கலாம் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சாந்தாசீலா நாயருக்கு அன்றைய அரசு அறிவிக்கை (Notice) கொடுத்தது. சாந்தசீலா நாயர், ‘இது அறிவுரைக் கழகத்தின் உரிமை’ என்று விடை கொடுத்தார். இப்போது அறிவுரைக் கழகம், இவர்கள் சொல்லும் இடத்தில் முத்திரை போட்டுக் கையெழுத்துப் போடுகிறது. எனவே இந்தத் தற்போக்கு அதிகாரம் (Arbitrary Power) ஆளுநருக்கும் இருக்கக்கூடாது; குடியரசுத் தலைவருக்கும் இருக்கக்கூடாது. அது குடியாட்சிக் கொள்கைக்கு எதிரானது. இது மன்னனுக்குரிய அதிகாரம்! மறந்துவிடாதீர்கள்!. ஒருவருடைய உயிரைப் பறிக்கும் அதிகாரம் அல்லது பறிக்காமல் விட்டுவிடுகிற அதிகாரம் மன்னனுக்கு உரியது. அரசமைப்புச் சட்டத்தின் 161 வது உறுப்புக்கும் 72 வது உறுப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்! 161 வது உறுப்பின்கீழ் ஆளுநர் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கலாம்; ஆனால் மரணதண்டனைக் கைதியை விடுவிக்க முடியாது. ஆனால் குடியரசுத்தலைவர் 72 வது உறுப்பின் படி ஒரு மரணதண்டனைக் கைதியை விடுதலையே செய்யலாம். இவ்வளவு இறுக்கமான சூழல் இப்படி ஓர் அரசு! இப்படிப்பட்ட அலுவலர்கள்! என்ன நடக்கிறது என்று தெரியாத அறிவுத்துறையினர்!

நண்பர்களே கையெழுத்து இயக்கத்தைப் பற்றிச் சொன்னார்கள். கையொப்பம் இடுவது என்றால் என்ன? பொறுப்பேற்பது என்பது பொருள்; ஒருசிலர் ஏதோ காரணம் சொல்லிக் கையொப்பமிட மறுத்து விட்டார்கள். சரியோ தவறோ அது அவர்களுடைய உரிமை! அவர்களைப் பற்றி நாம் பேச வேண்டாம். ஆனால் கையொப்பமிட்டவர்கள் ‘நளினியை விடுதலை செய்’ என்று கையொப்பமிட்டவர்கள். இப்போது விடுதலை செய்ய மறுத்திருக்கிற அரசைக் கண்டிக்கிறார்களா? வர வேண்டும்! தெருவுக்கு வந்து பேச வேண்டும்!

நளினி பயங்கரவாதி என்று அறிவுரைக்கழகம் சொல்கிறது; விடுதலை செய்ய முடியாது என்று அரசு சொல்கிறது. நீங்கள் விடுதலை செய் என்று கேட்டீர்களே! என்ன அடிப்படையில் கேட்டீர்கள்? முக தாட்சணியத்திற்காக ஒப்பம் இட்டீர்களா? யார் எதை நீட்டினாலும் ஒப்பமிட்டு விடுவீர்களா? ஒப்பமிட்டவர்களுடைய சமூகப் பொறுப்பு என்ன? மக்கள் புரிந்து கொள்கிறார்களா? புரிந்து கொள்ளவில்லையா? என மக்களிடம் போவது அப்புறம் இருக்கட்டும்.

தமிழ்ச் சமூகத்தின் அறிவுத்துறையினர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார்கள்? அவர்கள் தெருவுக்கு வரவேண்டும். அரசுக்கு வேண்டியவர்களா வேண்டாதவர்களா? அரசில் இருப்போர்க்கு உறவினர்களா இல்லையா? என்பதெல்லாம் பொருட்டே அன்று. நீங்கள் ஒரு காரணம் சொன்னீர்கள். இப்போது இந்த வாதத்தில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?

எனவே தான் நண்பர்களே! மரண தண்டனை ஒழிப்பு என்பது போல காலவரம்பு குறிப்பிடாத வாழ்நாள் தண்டனை ஒழிப்பு என்பதும். ஒரு வேடிக்கை பாருங்கள்! மரணமும் வாழ்வும் (‘Death and Life’) ஒன்றாக இருக்கின்றன. இரண்டும் மனிதனுடைய சீர்திருத்தத்திற்கு, மனமாற்றத்திற்கு எதிராக இருக்கிறது. ‘உனக்கு என்றுமே விடுதலை இல்லை’ என்று! ஒரு காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது. அறிவுரைக் கழகப் பரிந்துரையை அரசு மறுக்கிறபோது அடுத்த தேதியைக் குறிப்பிடுவார்கள்! இது விதிகளில் உள்ளது. ஓராண்டு கழித்து முதல் முறை எனக்கு மறுத்தார்கள். ஓராண்டு கழித்துப் பரிசீலனை என்று கூறினார்கள். வாழ்நாள் கைதிகள் காத்திருப்பார்கள். ஓராண்டுச் சிறை எப்போது முடியும் அதுவரை என்ன செய்யலாம்? இப்போது நளினிக்கு மறுத்திருக்கிற உத்தரவில் அடுத்த பரிசீலனை எப்போது என்னும் குறிப்பே இல்லை! இதனுடைய பொருள் என்ன? நளினி என்று இல்லை; யாராகவும் இருக்கட்டும். இனி உனக்கு விடுதலை இல்லை. நீ சிறையிலேயே கிடந்து சாக வேண்டியதுதான்! என்று அறிவித்ததற்குப் பிறகு அந்த மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஏழாண்டு, எட்டாண்டு கழித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றிக் கலைஞருக்கு நன்றி சொல்லி நான் நக்கீரனில் கட்டுரை எழுதினேன். அதிலேயே கேட்டிருந்தேன். ‘ஐயா ஏழாண்டு, எட்டாண்டு கழித்தவர்கள் விடுதலையாகிச் செல்லும்போது பதினேழு ஆண்டுகளாகச் சிறையில் இருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். விடுதலை செய்தது நல்லது. ஆனால் மற்றவர்களின் நிலை என்ன? முரசொலியில் நான் எழுதியதை எடுத்துக்காட்டிக் கலைஞர் ஒரு கடிதமே எழுதினார். இந்த வாக்கியங்களை மட்டும் நீக்கிவிட்டு அதை எடுத்து வெளியிட்டார். இது மாநில அரசு பற்றிய செய்தி மட்டுமன்று!

ஆந்திரத்தில் ஒரு காங்கிரசுத் தொண்டர் தெலுங்குத் தேசத் தொண்டரைக் கொன்றுவிட்டார். காங்கிரசு ஆட்சி அவரை விடுவித்தபோது நீதிமன்றம் குறுக்கிட்டது. ‘இது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு’ என்று அது கூறியது. அப்படியானால் அரசியல் காரணங்களுக்காக முடிவெடுக்கக்கூடாது அல்லவா? விடுதலை முடிவையும் எடுக்கக்கூடாது; விடுதலை மறுப்பையும் எடுக்கக்கூடாது. ஆனால் நளினிக்கு, நீங்கள் அந்தக் குற்றம் முன்னாள் பிரதமருக்கு எதிராக இழைக்கப்பட்டது. கொடுமையான குற்றம் என்பதைக் காரணமாகக் காட்டுவது அரசியலா இல்லையா? எங்களுக்கு (மாநில அரசுக்கு) அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டாலும் தில்லியைக் கலந்துகொண்டு முடிவெடுக்கிறோம் என்று சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்கிறீர்களே! இதற்கு அரசியலைத் தவிர வேறு என்ன காரணம்? வழக்கை அரசியல் கருதாமல் உங்களால் (மாநில அரசால்) பார்க்க முடியவில்லை.

இதில் இருந்துதான் நம்முடைய அரசியல் சிக்கல் என்பது எழுகிறது. நீதிபதி தாமசு அவர்கள், ‘நளினிக்கு வாழ்நாள் தண்டனைதான் விதிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே எழுதினார். ஏன் மரண தண்டனை விதிக்கத் தேவையில்லை என்பதற்கு அவர் பெண் என்பது, குழந்தை உள்ளது என்பது என எல்லாக் காரணங்களையும் காட்டினார். இன்னொரு காரணத்தையும் காட்டினார். அது என்னவென்றால் நளினியின் சகோதரன் பாக்கியநாதன் அவனுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் நளினி தன்னிடம் கூறியதாக ஓர் உண்மையைச் சொல்லியிருக்கிறான். அது ‘சிறீபெரும்புதூர் போய்ச் சேர்ந்த பிறகுதான் இப்படி ஒன்று நடக்கப் போவது தனக்குத் தெரியும்’ என நளினி கூறியிருக்கிறாள் என்பதாகும். ‘அதை நான் நம்புகிறேன்’ என நீதிபதி தாமசு எழுதுகிறார். ‘அங்குப் போனதற்குப் பிறகு, இது நடக்கப்போவது தெரிவதற்குப் பிறகு அவரால் வெளியேறவோ தப்பிவரவோ அதைத் தடுக்கவோ வாய்ப்பில்லை. சிவராசன், தனு, சுபா ஆகியோரிடமிருந்து வெளியே வர வழியில்லை. எனவே அவர் ஒரு சூழ்நிலைக் கைதியாக கொண்டிருக்கிறார். இதையும் கருத்தில் கொண்டு அவருக்கு மரண தண்டனை தேவையில்லை என்று நான் முடிவு செய்கிறேன்’ இக்கருத்து நீதிபதி எழுதியது.

மற்ற இரண்டு நீதிபதிகள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு அவர்கள் காட்டுகிற காரணம்தான் வழக்கின் அரசியலை நமக்கு வெளிப்படுத்துகிறது. நீதிபதி காக்ரி, மாக்பா ஆகியோர் மற்ற இரு நீதிபதிகள். அதில் ஒரு நீதிபதி எழுதுகிறார்; காவல்துறையினர் உட்பட பதினைந்துப் பேர் இறந்ததை எடுத்துக்காட்டி அவர் எழுதுகிறார். அவர் ‘ஒரு முன்னாள் பிரதமரை இவர்கள் குறிவைத்தார்கள்; ஏனென்றால் இந்த நாடு அதன் இறையாண்மை அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓர் அயல்நாட்டோடு உடன்பாடு செய்தது. (A former Prime Minister of the country was targetted because this country had entered an agreement with a foreign country in exercise of its sovereign powers). இராசீவ் காந்தி அந்நேரத்தில் அரசின் தலைவராக இருந்ததால் இலங்கை அரசுத் தலைவருடன் சேர்ந்து இவ்வுடன்பாட்டில் கையொப்பமிட்டார். இந்த உடன்பாடு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது. இராசீவ் காந்தி இவ்வொப்பந்தத்தைத் தனிப்பட்ட முறையிலோ சொந்த நலனுக்கோ செய்துகொள்ளவில்லை. இந்தச் சதியின் நோக்கம் பயங்கரவாதச் செயலோ சீர்குலைவுச் செயலோ செய்வது இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட நாட்டின் நலனுக்காகச் செயல்பட்ட ஒரு முன்னாள் பிரதமரைக் கொலை செய்தது என்பது இந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கொடிய தன்மையை வெளிப்படுத்துகிறது. இது நாட்டின் வரலாற்றில், குற்றங்களின் வரலாற்றில் ஒப்புவமை இல்லாத ஒரு செயலாகும். இராசீவ் கொல்லப்பட்டது மட்டுமன்று; வேறு பலரும் கொல்லப்பட்டார்கள்; காயமடைந்தார்கள்’ என்று சொல்கிறார். எனவே ஒப்பந்தம் பற்றிய விவாதத்தை இங்கே கொண்டு வருகிறார்கள்; இறையாண்மை பற்றிய விவாதத்தை இங்கே கொண்டு வருகிறார்கள்.

நண்பர்களே! நான் ஒன்றைக் கேட்கிறேன் நீதிபதிகள் செய்திகளையாவது ஒழுங்காகப் பதிவு செய்கிறார்களா? என்றால் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இந்திய நாடாளுமன்றத்தின் முன் வைத்து எப்போது ஒப்புதல் பெற்றார்கள்? எந்தப் பன்னாட்டு ஒப்பந்தத்தையும் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெறுவதே கிடையாது. நாடாளுமன்ற சனநாயகம் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அணு சக்தி தொடர்பான இந்திய அமெரிக்க ஒப்பந்தம் ஒப்புதல் பெறப்பட்டதா? நம்பிக்கைத் தீர்மானத்தின் மூலம் விவாதம் வந்ததே தவிர ஒப்பந்தத்தை முன்வைத்து அவர்கள் ஒப்புதல் பெறவில்லை. இப்போது வந்திருப்பது ஒப்பந்தம் இல்லை. இது சட்டம்; சட்ட முன்வடிவு (Nuclear Liability Bill) இது. அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுக்கு உச்ச வரம்பு கொடுக்கிற சட்ட முன்வடிவு இது!

இப்படி ஓர் ஒப்பந்தம் வந்தது; ஒப்பந்தம் போடப்பட்டதற்காக இராசீவ் கொல்லப்பட்டார் என்றால், அது இந்திய இறையாண்மை என்றால், எதைப் பற்றி ஒப்பந்தம் போட்டாய் என்று நாம் விவாதிக்க வேண்டாமா? ஈழத்தின் இறையாண்மையை மீறி அந்த மக்களின் வருங்காலத்தை மாற்றியமைக்க ஒப்பந்தம் போட உனக்கென்ன உரிமை? இந்த விவாதத்தில் நீதிபதிகள் ஈடுபட்டால் நாமும் ஈடுபடலாம். அதே போல் மற்றொரு நீதிபதி இந்த வழக்கில் ஏன் மரண தண்டனை விதிக்கிறார் என்பதற்கு வேறு ஒரு தீர்ப்பை எடுத்துக்காட்டி, ‘சட்டத்தின் உயர்ந்த அளவு தண்டனையில் இருந்து தப்பவிடுவது என்பது நீதியைக் கேலிக்கூத்தாக்கிவிடும். இவர்களுக்குக் குறைந்த தண்டனை அளிப்பதாக இருந்தால் நாட்டின் நீதித்துறை மீது மக்கள் ஐயம் கொள்வார்கள். சாதாரண மனிதன் நீதிமன்றங்களிடம் நம்பிக்கை இழந்துவிடுவான்.’ என்று சொன்னார்.

இதுதான் முதன்மையானது இவை போன்ற வழக்குகளில் மனிதனைச் சீர்திருத்துவது பற்றிய சொல்லாடலைக் காட்டிலும் அச்சுறுத்தித் தடுப்பது என்ற மொழிதான் சாமானிய மனிதர்களால் பாராட்டப்படும். குற்றவாளியைத் திருத்துவதெல்லாம் தேவையில்லை எனப் பாமரன் நினைக்கிறான். ஏதோ மனித உரிமை ஆர்வலர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவனுக்கு எது முதன்மையானது என்றால் அடித்தவனைத் திருப்பி அடிக்க வேண்டும். இதைத்தானே இராஜஸ்தானில் செய்திருக்க வேண்டும். மக்கள் விரும்புகிறார்கள் என, சாதியாள் விரும்புகிறான் என சாதிவிட்டு சாதித் திருமணம் செய்ததற்காகக் கொலை செய்கிறான். இதை உயர்த்திப் பிடிக்கும் வகையில் தான் ‘நளினிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’ என்கிறார். மரண தண்டனை தேவையில்லை என்னும் நீதிபதி தாமசின் கருத்தை இவர் மறுதலிக்கிறார்.

நண்பர்களே! இறுதியாக ஒரு கருத்து! இந்த அரசியல் என்பது உண்மையில் அப்சல் குரு வழக்கில் வெளிப்பட்ட ஓர் அரசியல். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேராசிரியர் கிலானி விடுதலையாகி வெளியே வந்தவுடன், ‘என்னை விடுதலை செய்திருந்தாலும் இந்தத் தீர்ப்பு அநீதியான தீர்ப்பு’ என்றார். ஏன்? அப்சல் குரு ஒரு குற்றவாளி என்று காட்டுவதற்காக பொடா சட்டத்தின் படி வழக்குப் போட்டார்கள். உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் இவர்(அப்சல் குரு) எந்தப் பயங்கரவாதக் குற்றச்சாட்டின்படியும் தண்டிக்கப்படவில்லை. ஏனென்றால் பயங்கரவாதக் குற்றம் என்பது பயங்கரவாத அமைப்பில் இருந்துகொண்டு செய்வது! இவர் எந்தப் பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர் என்பதற்குச் சான்று இல்லை. எந்தப் பயங்கரவாதக் குற்றச்சாட்டும் இவர் மீது போடப்படவில்லை. எனவே பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து விட்டோம். என்று சொன்னது. பிறகு எப்படி மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது? அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தான் மிகுந்த வேடிக்கைக்குரியது! தேசத்தின் ஒட்டுமொத்த உளச்சான்றை நிறைவு செய்வதற்குத் (‘In order to satisfy the collective conscience of the nation’) தண்டனை இல்லாமல் இவரை விட்டுவிடக்கூடாது என்றார்கள்.

சென்னையில் கருத்து அமைப்பின் கார்த்தி சிதம்பரத்தையும் கனிமொழியையும் இந்த மேடையில் கேட்டுக்கொள்கிறேன் நளினி விடுதலை தொடர்பாக ஒரு கருத்து அமர்வை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று. மரணதண்டனை வேண்டுமா வேண்டாமா என்று அவர்கள் ஒரு கருத்தரங்கம் நடத்தினார்கள். ஆழ்வார்ப்பேட்டையில் என்று நினைவு! பாரதிய சனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் ‘மரண தண்டனை வேண்டும்’ என்று வாதிட்டார். ‘மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் சொன்ன காரணங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்தியாவில் பயங்கரவாதம் தலைதூக்கியிருக்கிறது. அதை ஒழித்துவிட்டுப் பிறகு மரணதண்டனையை ஒழித்துக்கொள்ளலாம். எனவே இப்போதைக்குப் பயங்கரவாதிகளுக்கு எதிரான மரண தண்டனை தேவை! அதற்கு ஒரு சான்று அப்சல்குருவைத் தூக்கிலிட வேண்டும். தூக்கிலிட்டால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்’ என்று அவர் வாதிட்டார்.

நான் அவரிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்டேன். ‘பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அப்சல்குருவைத் தூக்கிலிட வேண்டும் என்று சொல்கிறீர்களே! அப்சல் குரு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இரண்டு உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தெரியுமா தெரியாதா உங்களுக்கு? 1. அப்சல் குரு எந்தப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் மெய்ப்பிக்கப்படவில்லை. 2.அப்சல் குருவிற்கு எதிரான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை இது தெரியுமா தெரியாதா?’ இதுதான் இல. கணேசனிடம் நான் கேட்ட கேள்வி! அவர் நான் செய்தித்தாளில் படித்ததைத் தான் சொன்னேன். இது பற்றி எனக்குத் தெரியாது. இதுவே கடைசிக் கேள்வியாக இருக்கட்டும். இனி யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறிப் புறப்பட்டுப் போய்விட்டார். இதுதான் உண்மை!

தேசத்தின் ஒட்டுமொத்த உளச்சான்று, தேசத்திற்கு எதிரான குற்றம் (‘Crime against nation’) என்று சுப்பிரமணிய சாமி உயர்நீதிமன்றத்தில் வாதிடுகிறார். நம்முடைய வழக்கறிஞர் இராதாகிருட்டினன் சட்டப்பிரிவை எடுத்துக்காட்டிச் சொல்கிறார்; ‘பொது மன்னிப்பில் விடுதலை செய்கிறபோது மையப் புலனாய்வுத் துறைக்கு (C.B.I) வந்த வழக்கு என்பது சான்று இல்லை. 161வது உறுப்பின்படி மைய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டத்தில் குற்றம் இழைத்திருந்தால்தான் மைய அரசிடம் கேட்க வேண்டும். இங்கே நளினி வழக்கில் அப்படிப்பட்ட எச்சட்டத்தின் கீழும் தண்டனை இல்லை. சட்டம் ஒழுங்கு என்னும் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட வழக்குதான் இது! ஆனால் குற்ற நடைமுறைச்சட்டத்தின் 435ஆவது பிரிவின்படி அரசு ஒருவரை விடுதலை செய்கிறபோது தில்லிக் காவல் நிர்வாகம் (Central Police Establishment) நடத்திய வழக்காக இருந்தால் மைய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீங்கள் 161ஆவது உறுப்பின்படி தான் பத்தாண்டு கழித்தவர்களையும் ஏழாண்டு கழித்தவர்களையும் விடுதலை செய்கிறீர்கள். அப்படி விடுதலை செய்யும்போது நாங்கள் தில்லியில் கேட்டுக்கொண்டு விடுதலை செய்கிறோம் என்று சொல்வதற்குச் சட்டச்சான்று இல்லை’ என்று எடுத்துக்காட்டுகிறார்.

சுப்பிரமணிய சாமி திமிரோடு சொல்கிறார், ‘அவரை மீண்டும் சட்டக்கல்லூரியில் படிக்கச் சொல்லுங்கள்’ என்று! சுப்பிரமணியசாமியை முதலில் ஒரு தொடக்கப்பள்ளியில் போய்ப் படிக்கச் சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? அவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவர் படிக்கவே இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது உறுப்பின்படி ஒருமுறை மன்னிப்பு, தண்டனைக்குறைப்பு வழங்கப்பட்டுவிட்டது. இன்னொரு முறை தர முடியாது என்று சொல்கிறார்.

இக்கருத்தை உயர்நீதிமன்றத்தில் அவர் சொன்னார், உயர்நீதிமன்றம் அக்கருத்தைத் தள்ளிவிட்டது. எத்தனை முறை வேண்டுமானாலும் 161ஆவது உறுப்பின்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் இது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. அங்கேயும் போய்த் தேசத்திற்கு எதிரான குற்றம் (Crime against nation) என்று புருடா விட்டார். ‘Crime against nation’ என்று இப்போதும் வந்து பேசுகிறார். இதெல்லாம் தேசத்திற்கு எதிரான குற்றம் என்றால் எது தேசம் என்னும் கேள்வியை நாங்கள் கேட்காமல் விடுவோமா? இது உன் தேசத்திற்கு எதிரான குற்றம் என்று வைத்துக்கொள்! எங்கள் தேசம் வேறு! அரசியல் விவாதமாக்கினால் நாம் அரசியலாகவே விவாதிப்போம். அது பற்றி நமக்கு ஒன்றும் அச்சமில்லை.

ஜெயின் கமிசனில் என்ன துடித்தார்கள்? நேரு குடும்பத்தின் வாரிசு, இராசீவ் காந்தி நேரு குடும்பத்தின் வாரிசு என்றும் முன்னாள் பிரதமர் என்றும் மக்களின் அன்புக்குப் பாத்திரமான தலைவர் என்றும் நீதிபதிகள் வருணித்துக் கொண்டிருக்க உரிமை உண்டு என்றால் எங்களுக்கு போபர்சுத் திருடன் என்றும் ஈழமக்களின் கொலைகாரன் என்றும் வருணிக்கிற உரிமை உண்டு. ஏன் நாங்கள் சொல்ல மாட்டோம்? அது அரசியல் என்றால் நீ அதைத் தீர்ப்புக்குள் கொண்டுவராதே! அது ஒரு மனிதனின் உயிர் என்று பார். அது ஒரு தற்கொலைப் படுகொலை . குற்றம் மனிதக் கொலை! அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. அது என்ன இராசிவின் உயிருக்கு ஒரு தனி வருணனை, தனி விவாதம் எதற்கு? நேரு குடும்பம் என்பது என்ன? கலியுகக் குடும்பமா அது? இது எல்லாமே முடியரசு வாதச் சிந்தனை!

இந்த முடியரசுச் சிந்தனை குடியரசுக் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த முடியரசுச் சிந்தனைக்காகத் தான் சூலியசு சீசரைப் புருட்டசு கொன்றான். கொன்றதற்குப் பிறகு புருட்டசைப் போற்றிய மக்கள் ‘மாமன்னன் புருட்டசு வாழ்க!’ என்றார்கள். என்ன கொடுமை இது? சனநாயகம் என்பது மக்களின் விழிப்புணர்வில், சமத்துவ உணர்வில் ‘நீயும் நானும் எட்டுச்சாண் உசரம் கொண்ட மனுசங்கடா’ என்னும் சிந்தனையில் இருக்க வேண்டும். எந்தக் குடும்பமாக இருந்தால் என்ன? எந்தப் பதவியில் இருந்தால் என்ன? மானுடச் சமத்துவம் என்பது புனிதமான கொள்கை. இந்த மானுடச் சமத்துவத்தில் நம்பிக்கையில்லாச் சமூகம் இது. பார்ப்பனியப் பண்பாட்டில் ஊறிய சமூகம் இது. கருமம், தருமம், தண்டம் என்னும் சிந்தனையில் ஊறிய நீதிபதிகள் இவர்கள்! இவர்கள் வழங்குகிற தீர்ப்புகளை, அளிக்கிற முடிவுகளைப் புனிதமானவை என்று நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

நளினியை விடுதலை செய் என்பதற்கான போராட்டம் மட்டுமன்று இது! பேரறிவாளனை விடுதலை செய்! சாந்தனை விடுதலை செய்! முருகனை விடுதலை செய்! இராபர்ட்டு பயாசை விடுதலை செய்! செயக்குமாரை விடுதலை செய்! இரவிச்சந்திரனை விடுதலை செய்! நளினியையும் விடுதலை செய்! எழுவரையும் விடுதலை செய்! உடனே விடுதலை செய்!

விடுதலை செய்ய முடியாதா? ஐ.என்.ஏ வழக்கு விசாரணை பற்றிப் படித்துப் பாருங்கள். தில்லிச் செங்கோட்டையில்தான் நடந்தது. கோபால் தேசாய் வழக்கறிஞர். இளைஞர் ஜவகர்லால் நேரு ஓர் இளம் வழக்கறிஞராக வழக்கை நடத்தினார். நேதாசி சுபாசு சந்திர போசின் இந்தியத் தேசிய இராணுவத்தில் இருந்த மூன்று தளபதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வழக்கு அது! அந்த ஐ.என்.ஏ விசாரணைக்கு எதிரான போராட்டம் தான் இந்திய நாட்டில் 1945க்கும் 1947க்கும் இடையே பெரும் கலகமூட்டியது. இந்திய பிரித்தானியக் கடற்படையில் கலகம் எல்லாம் உண்டானது. காவல்துறைக் கலகம் ஏற்பட்டது. இந்த ‘ஐ.என்.ஏ’ விசாரணையை எதிர்த்து மிகப்பெரிய வேலைநிறுத்தம் சென்னையில் நடைபெற்றது. பிரித்தானிய அரசு இதற்கெல்லாம் விடை சொல்ல முடியவில்லை. இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தேவைதானா? அது பிரித்தானிய மனித குலத்தின் மதிப்பிடமுடியாத மாணிக்கக்கல் என்று சர்ச்சில் சொன்னபோது பிரதமர் அட்லி ‘இந்தியாவின் வெப்பநிலை புரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள்’ (‘It is quiet a different temperature in India’) என்று சொன்னார். அந்த வெப்பநிலையை உருவாக்கியது ஐ.என்.ஏ வழக்கு விசாரணை என்பதை மறந்துவிடாதீர்கள். நேதாஜி பிழைத்தாரோ செத்தாரோ! அவருடைய பின்னால் இந்தியா கொதித்து எழுந்தது. ஏதோ காந்தி போய் கத்தரிக்காய்க் கடையில் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது போல் அல்லவா சொல்கிறோம்! அப்படி எல்லாம் நடக்கவில்லை.

என்ன நடந்தது ஐ.என்.ஏ. வழக்கில்? மரண தண்டனை கொடுக்கிற வழக்கு அது! ‘தீவாந்திர சிட்சை’ என்று வாழ்நாள் தண்டனை கொடுத்தார்கள்; அனுப்பினார்களா அந்தமானுக்கு? அடுத்த நாள் அவர்களை விடுதலை செய்தார்கள். எவ்வளவு பெரிய குற்றம்? இராசத்துரோகம். பிரித்தானிய மன்னனுக்கு எதிராகப் போர் தொடுத்த குற்றம்! இரண்டாம் உலகப்போரில் சப்பானியப் படைக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றம்! இந்த நாட்டுமக்களின் பேரெழுச்சியால் அவர்களை விடுவிக்க முடிந்தது.

நாம் யாரிடமும் கெஞ்சிக் கேட்கவில்லை; மன்றாடிக் கொண்டிருக்கவில்லை. எங்களுடைய உரிமையை, மனித உரிமையை, என் இனத்தின் உரிமையை, என் தேசத்தின் உரிமையைக் கேட்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு என்ன விடை என்று கேட்கிறோம். ஓயமாட்டோம்! தலைசாயமாட்டோம்! இவர்களை விடுவிக்கிற வரைக்கும்! இவர்களை விடுவிப்பது என்பது எமது விடுதலையோடு இணைந்தது என்றால் அதுவரைக்கும் நாம் ஓயமாட்டோம். இதில் தெளிவாக நாம் இருக்க வேண்டும்.

மக்கள் எழுச்சியை நாம் உருவாக்க முடியும். மக்களிடம் நாம் உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வேலையை நாம் திறம்படச் செய்வோம். அதன் வழியாக மனித உரிமைகளை மதிக்கிற, மனித உரிமைகளை ஏற்றுக்கொள்கிற, மரண தண்டனையும் வாழ்நாள் சிறைத்தண்டனையும் இல்லாத ஒரு தண்டனை முறையை உருவாக்குவோம். அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக நளினியை விடுதலை செய் என்னும் முழக்கத்தை, அசைக்க முடியாத வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நெல்சன் மண்டேலாவை விடுதலை செய் என்னும் முழக்கம் இந்த உலகில் எழுந்ததே அதே போல் உலகில் தமிழன் இருக்கிற ஒவ்வொரு மண்ணிலும் நாட்டிலும் நகரத்திலும் நளினியை விடுதலை செய் என்னும் முழக்கத்தை நாம் எழுப்புவோம்.

அதன் வழியாக இந்திய அரசை, இந்திய அரசுக்கு முகவாண்மை செய்கிற, அவர்களோடு கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அடிமைகளாக இயங்குகிற தமிழ்நாட்டு அரசைப் பணிய வைப்போம்! நளினியை விடுவிக்க வைப்போம்! நன்றி வணக்கம்.

ஒலி வடிவில் தோழர் தியாகு உரை :

தோழர் தியாகு உரை

Advertisements

மாணவர் கல்விக்கு கைகொடுப்போம்

ஜூலை 17, 2009

மின்னஞ்சலில் வந்தது:

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது நமக்கான பணியாகவும் நம் கண் முன்னே நிற்கிறது. எனவே நமது சமூகப்பணியின் தொடர்ச்சியாக நாம் இப்பணியினை ஏற்று ஒரிரு மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாமே என்ற எண்ணம் தோன்றியது. நம் ஆர்குட் தமிழ்க் குழுமமான தமிழக அரசியல் குழுமம்( TNP) நண்பர்கள் சிலருடன் விவாதித்தபோது இதை மிகவும் வரவேற்றனர். இது தொடர்பாக த.நா.அரசியல் குழும நிறுவனர் நண்பர் கோபாலனைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவருக்கும் இத்தகைய எண்ணம் இருப்பதாகக் கூறினர். மேலும், இதன் ஆரம்பமாக ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியைத் தேர்வு செய்து அவர்களது மேற்படிப்புக்கு உதவலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். அவ்வாறு நாம் உதவும் பட்சத்தில் ஒரு மாணவருக்கு வருடாந்திர கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மற்றும் செலவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்வரைத் தொடர்ந்து உதவவெண்டும். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நாம் தத்தெடுத்தவுடனேயே அவர்கள் “நமது பிள்ளைகள்” என்றாகிவிடுகின்றனர். எனவே, அவர்களுக்கு முழு உதவியும் செய்ய வேண்டும்.

ஈழத்திற்காக களப்பணியில் நம் தோழர்கள் சிலர் ஈடுபட்டிருக்கையில் கும்மிடிபூண்டி ஏதிலிகள் குடியிருப்பில் , இந்த ஆண்டில் மேல் நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்களது மேற்ப்படிப்பை தொடர முடியாத நிலையில்( 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ) இருப்பது தெரியவந்தது ., (கடந்த கல்வியாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் நிறைய பேர் , படிப்பை தொடர முடியாத காரணத்தினால், கட்டட வேலைக்கும்,பெயிண்ட்ர் இன்னும் பலவகை கூலிவேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ..,) அவர்களுக்கு எவ்வகையிலாவது உதவலாம் என்று பல தொண்டு நிறுவங்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது .,

நாம் தேர்ந்தெடுத்த பிள்ளைகளின் விபரம்

புவனேசுவரி த/பெ சுப்ரமணியம் , வயது 17 , கும்மிடிபூண்டி.
BE கணினி அறிவியல்
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்…

நிஜந்தன் த/பெ ரவி, வயது 18 , கும்மிடிபூண்டி
Bsc Bio tech
ஜெயா கலைக் கல்லூரி
திருநின்றவூர்
சென்னை.

இவர்களுக்கான கல்வி கட்டணம்
புவனேசுவரி
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 59,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப….

நிஜந்தன்
கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 35,000/=
விடுதி கட்டணம் ரூ 32,000/=
மற்றும் இதர செலவுகள் அடிப்படை தேவைக்கேற்ப….
குறைந்தது ஆண்டுக்கு 1.5 லட்சம் தேவைப்படுகிறது. நான்கு ஆண்டுகள் என்றால் 6 லட்சம் ரூபாய். பெரியதொகைதான். ஆனால் நம்மில் பலர் ஒன்றாய் இணைந்தால் இது அவரவர் பங்குக்கு சிறு தொகையாகவே வரும். நாம் உறுதியாக நான்கு வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வுதவியை தமிழக அரசியல் குழுமத்தின் மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

அதை ஒரு அரசு சாராத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி அதன் மூலம் இது போன்ற உதவிகளைச் செய்யலாம் என்று எண்ணுகிறோம். அதைத் தொடங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.

அதற்கு முன் கல்லூரிகள் திறக்க இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தமிழக அரசியல் குழும நிர்வாகியான சக்திவேல் அவர்களின்( http://www.orkut.co.in/Main#Profile.aspx?uid=898104197585368552 ) வங்கிக் கணக்கு மூலம் முதலாவது தவணை உதவியைப் பெறலாம் என்று எண்ணுகிறோம். அவரது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விபரம் கீழே:

C Sakthivel
ICICI account no: 620401064769
Branch: Contonment Branch, Trichy

SWIFT CODE: ICICINBB

Bank code: 6204

மேலும் வரைவோலை, மற்றும் பணப்பட்டுவாடா அனுப்புபவர்கள் நண்பர் தயாளனின் விலாசத்திற்கு “C.Sakthivel” என்ற பெயரிலேயே அனுப்பலாம். அவரது விலாசம் கீழே

D. Dhayalan (தொடர்புக்கு : 9841150700)
B/GF, Kasi Arcade Annex-1
32/1, VOC Street
Kaikan Kuppam (Near Chennai Medical Center)
Valasaravakkam – Post
Chennai – 600087

தங்கள் மூலம் ஈழத்துச் சிறார்களின் கல்வி விளக்கேற்ற ஒரு உதவி அது சிறு துளியாய் இருந்தாலும், அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

குறிப்பு:

கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமில் இது போன்ற பலர் தங்கள் மேற்கல்விக் கனவுகளோடு, மண் சுமந்து கொண்டும், கலவை கலந்து கொண்டுமிருக்கிறார்கள். தங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்களால் ஒரு மாணவனுக்கோ, அல்லது மாணவிக்கோ அவர்களது மேற்கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் வசதியும், பெரிய மனதும் இருந்தால் தாங்கள் கும்மிடிப்பூண்டி ஏதிலி முகாமைத் தொடர்பு கொள்ளலாம். என்னைத் தாங்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அதன் முகவரியும், தொலைபேசி எண்ணும் வாங்கித் தருகிறேன்.

அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
இன்ன யாவினும் புண்ணியங்கோடியாம்
ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்

என்பார்கள். அதனைச் செயல் படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
உதவி உயருவோம்..!!!!!

எதிர்பார்ப்பு கலந்த நன்றியுடன்

தமிழக அரசியல் குழுமம் சார்பாக

த.சுரேஷ்

பின் குறிப்பு:
இதைத் தங்கள் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

இதைப் பற்றிய விவாதத்தினை காண http://www.orkut.com/Main#CommMsgs.aspx?cmm=7222740&tid=5357422439875434097&start=1

C.Sakthivel ( தொடர்புக்கு: 9843283778)
Research Scholar
School of Chemistry
Bharathidasan University
Tiruchirappalli-24, India
E-mail: skvchem@yahoo.com , skvchem@gmail.com

*************************************************************************************

ஈடுபட்டுள்ளோரின் முழு விபரமும் இங்கே உள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு பின் ஆவன செய்யலாம்.

நன்றி 


ராஜீவ் காந்தி கொலையில் மர்மங்கள்

மார்ச் 19, 2009

ராஜீவ் காந்தி கொலை – விடை தெரியாத வினாக்கள் –  விடுபடாத புதிர்கள் – பழைய ஆவணங்கள் பேசுகின்றன.

rajjiv-gandhi

1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது. ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம். இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் ‘முன் ஜோடிப்பு கதைகளை’ போட்டு உடைத்தாராம் துரைசாமி.

அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். ‘நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்’ என்று கூட சவால் விட்டார். இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். ‘அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது.ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. ‘விசேஷ’ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் ‘இந்துத்துவா’ அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து. ‘விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?’ என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்.

இத்தகவலை BLOG-இல் கொடுத்திருந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி